திருமூலர் அருளிய அட்டாங்க யோகம்

ஒன்று அவன்தானே;இரண்டுஅவன்இன்னருள் நின்றனன் மூன்றினுள்;நான்கு உணர்ந்தான் ஐந்து வென்றனன்;ஆறுவிரிந்தனன்,ஏழுஉம்பர்ச் சென்றனன்;தான்இருந்தான்;அஉணர்ந்துஎட்டே.

விளக்கம்:

நிலையான ஒரு பொருள் சிவன்,இனியவள் உமையுடன் அவனே இரண்டானான்.தொழில் வழியில் நான்முகன்,திருமால்,உத்திர என மூன்றானான்,அறம் பொருள் இன்பம் வீடு என்கிற நான்கும் உண்ர்ந்தவன். மெய்,கண்,மூக்கு,நாக்கு,காது என்கிற ஐம்பொறிகளையும் கடந்தவன். ஆறு ஆதாரங்களிலும் ஒளி செய்கிறவன்.ஏழாவது இடமான உச்சிட்ட தளத்தில் (ஆயிரம் இதழ்த் தாமரை என்கிற) விளங்குபவன்.நிலம்,நீர்,காற்று,நெருப்பு, ஆகாயம்,சூரியன்,சந்திரன்,ஆன்மா என்கிற எட்டுப் பொருள்களையும் உணர்ந்து இயக்கவும்,இயங்கவும் செய்பவன்.

ஓம்

ஓமெனும் ஓங்காரத் துள்ளே யொருமொழி ஓமெனும் ஓங்காரத் துள்ளே யுரு வரு ஓமெனும் ஓங்காரத் துள்ளே பல பேதம் ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.

ஓங்காரத்துள்ளே உதித்த ஐம்பூத மும் ஓங்காரத்துள்ளே உதித்த சரா சரம் ஓங்காரதீதத்து உயிர் மூன்றம்உற்றன. ஓங்கார சீவன் பரசிவ ரூபமே.

விளக்கம்:

ஓம் என்கிற ஒரு மொழி மகா வாக்கியத்தை (தத்வமசி)உட்படுத்தியது. உருவப்பொருளையும். அருவப்பொருளையும் ஒருசேரக் கொண்டது ஓங்காரம். அதில் இருந்தே பல நூல்களும். பல மந்திரங்களும் தோன்றின.அதன் இயல்பு அறிந்து பயில்வோருக்கு வீடுபேறும் கிடைக்கும்.

ஐம்பூதங்களும் பிரணவத்தில் இருந்து தோன்றின.அசையும் வகை,அசையா வகை என அனைத்து உயிர்களும் பிரணவத்தில் இருந்து தோன்றிய உடல்களில் புகுந்தன.விஞ்ஞானகலர்.பிரளயாகலர்.சகலர் என மூவர்.மும்மலங்களை விட்ட உயிர்கள் சிவத்தை அறிந்து சிவமாந்தன்மை பெறும்.

அட்டாங்க யோகம்

இயம நியமமே எண்ணிலா ஆதனம் நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம் சயமிகு தாரணை தியானஞ் சமாதி அயமுறும் அட்டாங்க மாவது மாமே

விளக்கம்:

இயமம் என்கிற புலனடக்கம்,நியமம் என்கிற நல் ஒழுக்கம்,எண்ணற்ற ஆசனங்கள்,நலம்தரும் பிராணாயாமம்,பிரத்தியாகாரம் வெற்றி தரும் தாரணை,தியானம்,சமாதி என்ற எட்டும் நல்வினை தரும்.

அஷ்டாங்க யோகா வின் எட்டு நிலைகள்

இயமம்

பதஞ்சலி யோகசூத்திரம் ஐந்து இயமங்களை நவில்கின்றது: கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, வெஃகாமை  புலன் அடக்கம் என்பனவாம்.ஆனால் திருமந்திரமோ பத்தினை நவில்கின்றது: கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, நல்ல குணங்கள், புலன் அடக்கம், நடுநிலைமை (விருப்பு வெறுப்புக்கள் இன்மை), பகுத்துண்டல், மாசின்மை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை என்னும் பத்தனையும் முற்ற உடையவனே இயம யோகம் கைவரப் பெற்றவனாவான் ஆகும்.

நியமம்

 தவம், மனத்தூய்மை, வாய்மை, தத்துவ நூலோர்தல், பெற்றது கொண்டு மகிழ்தல், தெய்வம் வழிபடல்.

ஆசனம்

உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல்.

பிராணாயாமம்

உயிர்க்கும் உயிர் மூச்சைக் கட்டுக்குள் கொண்டுவருதல். மூச்சை உள்ளிழுப்பதும்,வெளிவிடுவதும் சீராக இருக்க வேண்டும்.அதில் பலவந்தம் காட்டக்கூடாது.மூச்சை வலப்பக்கமும்,இடப்பக்கமும் மமாற்றி மாற்றி செலுத்துவதால் நாடி சுத்தி ஏற்படும். மமூச்சின் இயக்கம் மூன்று வகை இடகலை,பிங்கலை,சுழிமுனை ஆகும்.மூக்கின் இடப்பக்கம் மூச்சு ஓடுவது இடகலை. மூக்கின் வலப்பக்க ஓட்டம் பிங்கலை. சமமாய் ஓடுவது சுழிமுனை.வலது மூச்சு குளிர்ச்சியும் மன சமநிலைக்கும் உதவும்.

பிராத்தியாகாரம்

மனமானது, புலன்கள் வாயிலாக விஷயாதிகளில் சென்று பற்றி உழலாவண்ணம் அடக்குதல்.மனத்தின் ஆற்றல்களைப் புறத்தில் போகாமல் தடுத்து உள்ளே குவித்தல் ஆகும்.

தாரணை

உந்தி,இதயம்,உச்சி என்னும் மூன்றிடத்தும் உள்ளத்தை நிலைநிறுத்தல்.குறிப்பிட்ட பொருளில் மனத்தை நிறுத்தி வைப்பது தாரனை.

தியானம்

கண்களைத் திறந்தும் திறவாமலும் வைத்துக்கொண்டு சிவனை உள்நோக்குதல். புத்தி ஐம்புலன்கள் இவற்றை ஒடுக்கி தியானம் செய்ய வேண்டும்.

சமாதி

விந்துநாதம் காணல்.அட்டமாசித்தியும் உண்டாகும்.

Design a site like this with WordPress.com
Get started